Thursday, 16 January 2014

தேடல்

ஏக்கங்களை 
எதிர்பார்ப்பில் நுழைத்து 
உன்னை தேடுகிறேன் 
சொட்டு சொட்டாய்
வடியும் என் 
குருதியினூடே

Wednesday, 29 August 2012

பேய்க்கூட்டம் (சிறுகதை)



நேரம் செல்லச் செல்ல மனது படபடக்கத் தொடங்கியிருந்தது.  நள்ளிரவை நெருங்க, நீண்ட நாள் சந்தேகத்திற்கு விடை காணப் போவதை எண்ணி ஒருபுறம் உற்சாகமாகவும் இருந்தது.

சில வருடங்களாகவே எங்களுக்குள் பேய் பற்றிய கதைகளும், பேய் இருக்கிறதா, இல்லையா என்கிற விவாதங்களும் நடைபெற்றுக் கொண்டே இருந்தது.  எங்களில் கண்ணனுக்கு மட்டும் பேய், பிசாசு மீது அதீத நம்பிக்கை உண்டு.  ஆனால் வினோத் அவனுக்கு நேர் எதிர்.  நானும் லெனினும் மட்டுமே எதை நம்புவது எதை நம்பாமல் இருப்பது என்ற பொதுவான குழப்பத்தைக் கொண்டிருந்தோம்.

இன்று எப்படியும் பேயை நேரில் பார்த்து விடுவது என்று எல்லோரும் தீர்மானமாய் முடிவெடுத்தோம் இரவு பனிரெண்டு மணிக்கு அனைவரும் சந்திப்பதாக, ஏற்கனவே பேசி வைத்திருந்தோம்.  மூங்கிலை இரண்டாய் பிளந்து வரிசையாய் அடுக்கி நேர்த்தியாக செய்யப்பட்டிருந்த வேலிலியின் படலைத் திறந்து வீட்டிற்கு வெளியே வந்தேன்.

அரை நிலவு பரப்பிக் கொண்டிருந்த வெளிச்சம் போதுமானதாய் இருந்தது.  அதன் உதவியால் ஓரளவிற்குத் தெளிவான காட்சிகளைக் கண்கள் காட்டியது.  இருபுறமும் நீளமாய் செல்லும், ரோட்டோரத்தில் பாலத்தின் இடுப்பு உயர சுவற்றில் நண்பர்கள் உட்கார்ந்திருப்பது தெரிந்தது.  மெல்ல அவர்களை நோக்கி நடக்கத் துவங்கிய போது, பாலத்தின் அடியிலிருந்து அருவருக்கத்தக்க சாக்கடை நாற்றம் வீசிக் கொண்டு இருந்தது.

அங்கிருந்து மூன்றாவது வீட்டில் யாரோ ஒருவர் பெரிதாய் ஏற்படுத்தும் குறட்டை சப்தத்தை தவிர, தெரு நிசப்தமாகவே இருந்தது.  ரோட்டில் இருபுறமும் ஒன்றொன்றாய் சென்று கொண்டிருந்த வாகனங்கள் குறைந்து இப்போது நடமாட்டமே இல்லாமல் இருந்தது.

காற்றின் வேகம் குறைவாகவே இருந்தாலும் மிதமான பனியால் லேசான குளிர் அடித்துக் கொண்டு இருந்தது.  நான் சின்ன வயதில் இருந்தே நிறைய பேய்க்கதைகளை கேட்டிருப்பதால் சிறிய நடுக்கம் இருக்கவே செய்தது.

எனது தாத்தா அவருடைய இளம் வயதில் முன்பு குடியிருந்த கிராமத்தில்லிருந்து அடுத்து உள்ள சற்றே பெரிய ஊரில் ஒரு கடலை மில்லில் வேலை பார்த்து விட்டு, அதிகமான நாட்களில் இரவு தாமதமாய் தான் வீட்டிற்கு வருவாராம்.  அதுவரை எனது அப்பத்தா என் அப்பாவையும், சித்தப்பாவையும் தூங்க வைத்துவிட்டு அவருக்காகக் காத்திருக்குமாம்.

ஒருமுறை வேலை முடிந்து அவர் வரும் போது, வழியில் சுடுகாடு அருகே ஒருவர் வெளிக்கு இருப்பது போல் உட்கார்ந்து இருந்து இருக்கிறார்.  அவரைப் பார்த்ததும் அருகில் சைக்கிளை நிறுத்தி ஒரு காலை மட்டும் தரையில் ஊன்றி, ”யாருய்யா அது, சுடுகாட்டுகிட்ட வந்து இப்புடி ஒக்காந்துருக்கது?’’ என்று கேட்டு இருக்கிறார்.

அந்த ஆள் விருட்டென எழுந்து கண்களை பெரிதாக உருட்டி விழித்திருக்கிறார்.  கண்கள் ஒவ்வொன்றும் ஒரு பணியாரம் அளவிற்கு பெரிதாய் தெரிந்ததாம்.  உடனே அலறியடித்துக் கொண்டே சைக்கிளை அழுத்தி ஓடி வந்துவிட்டாராம்.

அன்றிலிருந்து வேலை முடிவடைய நேரம் தாமதமானால் மறுநாள் காலையில் தான் வருவாராம்.  இதை அப்பத்தா அடிக்கடி சொல்லும்.

சித்தப்பா ஒருநாள் சினிமா பார்த்துவிட்டு நள்ளிரவில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது கருமை தவிர வேறொன்றும் கண்களில் தென்படாத நிலையில், இரண்டு கருப்பு நிற நாய்கள் குறுக்கே ஓடிவந்து சைக்கிளை தள்ளிவிட்டிருக்கின்றன.

கீழே விழுந்து விரெண்டு எழுந்த அவர், ஒடுச்சி, ஒடுச்சி, என்று கத்திக் கொண்டே எழ  நாய்கள் காணாமல் போயிருந்திருக்கிறது.

நடந்த விஷயம் காலையில் தான் எங்களுக்குத் தெரிந்தது.  பதினைந்து இருபது நாட்கள் வரை ஜøரம் வந்து படுத்திருந்தார் சித்தப்பா.  பல இடங்களில் சாமியார்களைப் பார்த்து விபூதிகளை பூசுவதும், தாயத்துக்களை கட்டுவதுமாய் இருந்தார்கள்.



அந்த சமயத்தில் அவர் அருகில் போகவே பயமாய் இருக்கும்.  உடல் மெலிந்து கண்கள் சிவக்க, திண்ணையோரமாய் உட்கார்ந்து இருப்பவரைப் பார்த்தாலே ஓடி விடுவேன்.  ஒரு வழியாக உடல்நிலை சரியாகி சகஜமான பின்புதான் அருகில் போக ஆரம்பித்தேன்.

”டேய், நெஜமா முருகேசு சொன்னானா? இல்ல ஒரு பிட்ட போட்டு எங்களை இங்க ஒக்கார வச்சுருக்கியா?’’ நச்சரிக்கத் தொடங்கியிருந்தேன்.

”பொய் சொல்லிலிட்டு நானும் கூடவே இருப்பேனா? உண்மைதாண்டா.’’ சலிலிக்காமல் பதில் சொல்லிக் கொண்டே இருந்தான் லெனின்.

பையிலிருந்து எடுத்து பற்ற வைத்த சிகரெட், வினோத் வாயருகே பெரிதும் சிறிதுமாய் சிவப்பாய் மின்னிக் கொண்டு இருந்தது.

என் வீட்டின் மூங்கில் கேட் திறக்கும் சப்தம் கேட்க, வேகமாய் சிகரெட்டை சாக்கடைக்குள் தூக்கி எறிந்தான்.

வெளியில் வந்த அம்மா,

”இன்னம் என்னடா பண்ணிக்கிட்டிருக்க? மணி பன்னண்டரை ஆகப் போவுது, நேரங்கெட்ட நேரத்துல சரியில்லாத ரோட்டுல ஒக்காந்துருக்காம வந்து படு,’’ என்று திட்ட ஆரம்பித்தது.

”நீ போம்மா, நான் வந்து படுக்குறேன்’’ என்று அதை அனுப்பி விட்டு நான்கு பேரும் நேரம் ஆகிவிட்டதை அடுத்து என் வீட்டு வேலிப்படலுக்குள் நுழைந்தோம்.

எனக்கு ஐந்து வயதிருக்கும் போது ஒருமுறை இரவில்,  தூக்கத்திலிருந்து எழுந்து, லேசாய் சாத்தப்பட்டு இருந்த கதவை திறந்து வெளியே வந்திருக்கிறேன்.  திடுக்கிட்டு எழுந்த அப்பா வேகமாய் பின்னால் வர, நான் சுடுகாடு இருக்கும் திசையில் நடக்கத் தொடங்கியிருந்திருக்கிறேன்.  அவசரமாய் என்னைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் ஓடிவந்திருக்கிறார்.

அது முதல் நாலாம் வகுப்பு படிக்கும் வரை அம்மா அதன் சேலை தலைப்பின் ஒரு நுனியை என்னுடைய   அரணாக் கயற்றில் கட்டி அருகில் படுக்க வைத்துக் கொள்ளும்.  தூக்கத்தில் உருண்டால் கூடக் கண்டுபிடித்துவிடும்.

நகரத்திலிருந்து முக்கியமாக  ஏழெட்டு கிராமங்களுக்குச் செல்லும் சாலையாக இருந்தாலும், என் வீட்டருகே உள்ள அந்த ரோட்டில் தான் நகரின் பிரதான சுடுகாட்டிற்கு போக வேண்டும்.

நிறைய பேர் அந்த வழியில் பேய்களைப் பார்த்ததாக என்னிடம் பலமுறை சொல்லியிருக்கிறார்கள்.

பேய்க்கதைக் கேட்டு தூங்கச் சென்றிருந்த ஒருநாள், நான் சுவரோரமாய் படுத்திருந்த போது ஜன்னல் வழியாக நீளமான வெள்ளை முடிகளோடு ஊதா நிற கை ஒன்று என்னைப் பிடித்து கழுத்தோடு சேர்ந்து இறுக்க திடுக்கிட்டு கண்விழித்தேன்.  நெஞ்சு படபடவென அடித்துக் கொண்டிருந்தது.  கனவு என்பது புலப்பட்ட பிறகுதான் மனதில் சிறிய பயம் கலைந்தது.

இருட்டுக்குள் கைகளால் தடவி அண்ணன் படுத்திருப்பதை உறுதி செய்து கொண்டு, அண்ணனை இறுக்கமாய் அனைத்தவாறு படுத்துக் கொண்டேன்.  அன்றிலிருந்து சுவர் ஓரமாக படுப்பதே இல்லை.

வினோத்திடம் பேய் பற்றி பேசினால், “அட போடா, பேயாவது ஒன்னாவது,’’ என்பான்.

”பேய், சாமினு எதுவுமே இல்லடா, எல்லாமே மனுசனே உருவாக்குனது தான்.  அதெல்லாம் நம்பாதிங்கடா’’ என்று அறிவுரை சொல்லத் தொடங்கி விடுவான். ”அப்ப, தெனமும் காலையில பேய்புடிச்ச பொண்ணுகளுக்கு ஜெபம் பண்ணி பேய் வெரட்டுரத டிவியில காட்டுறாங்களே அதெல்லாம் பொய்யா?’’

”ஆமாடா, அது மக்கள ஏமாத்துற வேலை, டாக்டர் காப்பாத்த முடியாதுனு கைய விரிச்சுட்டாரு, ஜெபம் பண்ணுன ஒடனே பொழைச்சிட்டாங்கனு, இஷ்டத்துக்கு கதை வுடுவாங்க, நாமளும் அத வாயப் பொளந்துகிட்டு பார்ப்போம்.’’

எங்களது கேள்விகளுக்கு சற்றும் சளைக்காமல் வினோத் பதில் சொல்லிலிக் கொண்டே இருப்பான்.

”ஒனக்கு நம்பிக்கை இல்லங்கறதுக்காக, பொய் பேசாத, திருவுழா நேரத்துல அருள் வந்துச்சுனா, அவங்க நெருப்புல கூட நடப்பாங்க.  நீ நடந்து பாரு அது சுட்டுப்புடும்.’’

”எப்பவாச்சும் ஒனக்கு சாமி வந்துருக்கா? இல்ல எனக்குதான் வருதா? அதெல்லாம் வெறும் நடிப்புடா.’’

அவன் அதிக வாதத்திறமை கொண்டவன் என்பதாலும் எங்களால் அவன் அளவிற்கு வாதம் செய்ய முடியாது என்பதால் வேறொரு தளத்திற்கு பேச்சை கொண்டு சென்று விடுவோம்.

அவன் சொல்வதை நாங்கள் நம்பவில்லை என்பதை, தான் புரிந்து கொண்டதை, புருவத்தை லேசாக மேலே உயர்த்தி ஒரு பார்வையால் வெளிப்படுத்துவான்.

சமயங்களில் இந்தக் குழப்பம் என்னைப் பெரிதாய் குடையத் தொடங்கியிருந்தது. 







”பேய் பார்த்துருக்கியாமா?’’ என்று அம்மாவிடம் அடிக்கடி கேட்க தொடங்கியிருந்தேன்.

”பார்த்துருக்கேன், அத ஏன்டா கேக்குற?’’

”சும்மாதான், அது எப்புடிமா இருக்கும்?’’

”வெள்ளை வெள்ளேர்னு இருக்கும், இப்ப என்னடா ஆச்சு ஒனக்கு?’’

”நான் பேய பார்த்து இல்லல்ல.  அதான் கேட்டேன்.’’

என்னைச் சுற்றியுள்ள பலரும் பேயை பார்த்திருப்பதாக சொல்லிக் கேட்டிருப்பதால் வினோத் பேச்சை நம்பவில்லை.  ஆனாலும் அவனுடைய விவாதங்கள் என் மனதில் சிறிய சந்தேகத்தினை ஏற்படுத்தவே செய்தது.  குழப்பத்தையும் அதிகப்படுத்தியிருந்தது.

முன்னொருமுறை பேய் விரட்டுவதாய் சொல்லி ஒரு நடுத்தர வயது பெண்மணி சாமியாடிக் கொண்டே, எங்கள் வீடு இருக்கும் தூரம் வரை விபூதியை வீசிக் கொண்டே வந்து திரும்பும் போது, அம்மா ஏங்க சின்னப் புள்ளைங்க இருக்கிற எடம், இங்க வந்து வெரட்டி விட்டுட்டு போறீங்க’’ என்று பேச, அந்தப் பெண்மணி இன்னும் கொஞ்சம் தூரம் சென்று விபூதியை வீசிவிட்டு போனாள்.

டேய், வெட்டித்தனமா ஏன்டா கண்ணு முழிச்சிகிட்டு இருக்கீங்க? பேயெல்லாம் ஒன்னும் வராது போய் படுங்கடா, என்னையும் தூங்க விடாம புடிச்சி வச்சுருக்கீங்க வினோத் புலம்பத் தொடங்கினான்.

”முருகேசு பய சொன்னாம்பா, அவன் நைட்டு பார்த்தது பேயிதான்னு அடிச்சு சொன்னான்.  ஒன்னுக்கு இருக்க எந்திருச்சு வந்தப்ப போன வாரம் ஆலங்குடி ரோட்டுல ஆக்சிடென்ட் ஆகி செத்த பழைய இரும்புக்கடை ரத்தினம் வந்தாராம்.  இன்னம் கொஞ்சம் நேரம் இருந்து பார்த்துட்டு போகலான்டா கெஞ்சினான் லெனின்.

”பேசாம வீட்டுக்கு போயிரலான்டா கண்ணனுக்கு பயம் அதிகரித்துக் கொண்டு இருந்தது.”

நேரம் ஒரு மணியை தாண்டியிருக்க தூக்கம் அசத்த தொடங்கியது.

”மூஞ்சி கழுவினா தூக்கம் வராதுடா’’ நான் அழைக்க எல்லோரும் அருகில் இருந்த அடி பம்பில் தண்ணீர் அடித்து முகம் கழுவிக் கொண்டபோது, பைப்ப மோதாம அடிடா.  டங், டங்குன்னு சத்தம் கேக்குது  வினோத் அதட்டினான்.

நேரம் செல்லச் செல்ல ஒவ்வொருவராய் கலையத் தொடங்கினோம்.

பொழுது விடிந்து காலை ஆறு மணி ஆகிவிட்டது என்பதை, ஏற்கனவே தயார் செய்து வைத்திருந்த செல்போன் அலாரம் நினைவு கூர்ந்து எழுப்பிக் கொண்டிருந்தது.

தாமதமாக படுத்ததால் சோர்வாய் இருக்க எழ மனமில்லாமல் மெதுவாய் எழுந்து வெளியில் வந்தேன்.

வாசல் தாண்டி ரோட்டோரமாய் இருந்த காவிரி நீர்க்குழாயடில எதிர் வீட்டு சிவகாமி அக்கா, “ராத்திரி பாதி சாமத்துல அந்த அடிபைப்புல தண்ணி அடிக்கிற சத்தம் கேட்டுக்கிட்டே இருந்துச்சு.  நான் எந்திருச்சு வந்து பார்த்தேன், வெள்ளையா ஒரு உருவம் நின்னுச்சுடி, கால் கூட சரியா தெரியல.  எதுக்கும் ராத்திரி நேரத்துல யாரும் வெளியில வராதீங்க’’ என்று சொல்லிக் கொண்டு இருந்தாள்.